

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி(26). இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் 9 பேருடன், நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். கல்லட்டி பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை கல்லட்டி சாலை 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியிலுள்ள ஆற்றின் கரையில் பாறையின் மீது அனைவரும் அமர்ந்திருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் கட்டா வினிதா சவுத்ரி தவறி விழுந்துள்ளார்.
இதுகுறித்த தகவலின்பேரில் புதுமந்து காவல் உதவி ஆய்வாளர்ரமேஷ், உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை தேடுதல் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். காலை 9 மணி அளவில் கல்லட்டி ஆற்றின் கரையில் ஒதுங்கியிருந்த கட்டா வினிதா சவுத்ரியின் சடலத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக புதுமந்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.