Last Updated : 23 May, 2016 11:28 AM

 

Published : 23 May 2016 11:28 AM
Last Updated : 23 May 2016 11:28 AM

கோவையில் கம்யூனிஸ்ட் கோட்டை சரிந்தது எப்படி?

கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்தது, அக் கட்சியினரை கவலையுடன் விவாதிக்க வைத்துள்ளது.

கோவையை பொறுத்தவரை, ஒரு காலத்தில் பஞ்சாலை கள், இன்ஜினீயரிங் தொழிற்சாலை களால் சூழப்பட்ட நகரமாய் விளங்கியது. அதனால் தொழிற் சங்கங்களும் கொடிகட்டிப்பறந்தன. காங்கிரஸ்காரர்கள்கூட கம்யூனிஸ் ட்டுகளின் அடுத்த நிலையில் சோசலிஸ்ட் பார்வை கொண்டே தொழிற்சங்கங்களை நடத்தினர். அதன் விளைவாகவே கே.ரமணி, ஆர்.வெங்கிடு, பார்வதி கிருஷ்ணன், யு.கே.வெள்ளியங்கிரி, கே.சி.கருணாகரன், போன்ற வர்களெல்லாம் கோவை மாவட்டத் திலிருந்து எம்பி, எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்படி, கம்யூனிஸ்ட்களின் கோட்டை எனப்பட்ட கோவையின் மையப் பகுதியான கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் 4-வது இடத்துக்குச் சென்றுள்ளது இக்கட்சி. இதுகுறித்து இக்கட்சியின் தொண்டர்கள் சிலர் கூறியதாவது:

தொழிற்சங்க இயக்கங்களை முதலாளிகள் நீர்த்துப்போக வைத்தது கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலும் திமுக, அதிமுக அணியில் பங்கேற்று சில தொகுதிகளில் வெல்வது என்ற நிலையால் கட்சியின் தனித்துவ அடையாளம் தகர்ந்து வந்துள்ளது.

கட்சி குறிவைத்தது சிங்காநல்லூர் தொகுதி. இங்கேதான் ஏற்கெனவே கே.சி.கருணாகரன், ஆர்.வெங்கிடு போன்றவர்கள் வென்றுள்ளனர். இத்தொகுதிக்கு உள்ளிட்ட வார்டுகளில் கவுன்சிலர்களும் தொடர்ந்து இருந்து வந்துள்ளனர். எந்த கூட்டணி என்றாலும் அதில் இங்கேயே சீட் வாங்கி போட்டியிட அனைத்து ஆயத்தப் பணிகளிலும் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால், சிங்காநல்லூரில் வைகோ போட்டியிடுவதாகக் கூறி, மதிமுக இத் தொகுதியை எடுத்துக் கொண்டது. அதனால் கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட, வேறு வழியில்லாமல் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம்.

கோவை தெற்கு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு கோவை மேற்கு, கோவை கிழக்கு ஆகிய 2 தொகுதிகளை சரிபாதியாக பிரித்து உருவாக்கப்பட்ட தொகுதி.

கோவை கிழக்கில் ஏற்கெனவே மறைந்த கே.ரமணி சட்டப்பேரவை உறுப்பினராக பலமுறை இருந்து கட்சி வளர்ந்துள்ள பகுதி. ஆனால் கோவை மேற்கில் அப்படியொரு அஸ்திவாரம் கட்சிக்கு கிடையாது. அந்த வகையில் இங்கு சுமார் 8 வார்டுகளில் மட்டுமே கட்சிக் கிளைகள் உள்ளன. எனவே வேறுவழியில்லாத பக்கத்தில் உள்ள சிங்காநல்லூர் தொகுதியை சேர்ந்தவரான அப் பகுதிக்குள் 3 முறை கவுன்சிலராகவும் இருந்தவரான சி.பத்மநாபன் களம் இறக்கப்பட்டார்.

தொகுதிக்குள் இருக்கும் கட்சிக் கிளைகள், தொண்டர்கள் பலம் போதாமல் சிங்காநல்லூர் தொகுதியை சேர்ந்த தொண்டர்களை உள்ளடக்கியே பிரச்சாரத்தை ஈடுகட்ட முடிந்தது. கூட்டணிக் கட்சியிலும் பெரிய அளவில் ஒத்துழைப்பு இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி தனியாக போட்டியிட்டது போன்ற சூழலே பிரச்சாரத்தில் ஏற்பட்டது.

ஆனால், எதிரணியில் அதிமுக, திமுக, பாஜக மூன்று வேட்பாளர்களுமே பிரச்சாரம் உள்ளிட்ட சகல ‘விஷயங்களிலும்’ சமபலத்தில் இருந்தனர். பாஜக வேட்பாளருக்கு நடிகர், நடிகைகள் மட்டுமல்ல பெயர் வெளியே தெரியாத மத்திய அமைச்சர்கள் கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தவிர, ஜெயின் சமூகம் போன்ற சமூகத்தினரின் ஆதரவை பெற முடிந்தது. இப்படி மற்றவர்களுக்கு ஒரு பக்கம்தான் அடி என்றால் இங்கே மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு சகல பக்கத்திலிருந்தும் அடி.

எனவேதான் 4-ம் இடத்துக்கு (பாஜக: 33,113 வாக்குகள், மார்க்சிஸ்ட்: 7,248 வாக்குகள்) செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதியை பொறுத்தவரை விளாங்குறிச்சி, சின்னவேடம்பட்டி பகுதிகளில் கட்சிக்கு நல்ல வலுவுள்ளது. வேட்பாளர் ராமமூர்த்தி சின்னவேடம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்தவர். இப் பகுதி கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு அவரே இப் பகுதியில் கவுன்சிலராக இருந்துள்ளார். விளாங்குறிச்சி பஞ்சாயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் பலர் அங்கம் வகித்துள்ளனர். அப்படியிருந்தும் (பாஜக: 22,444, மார்க்சிஸ்ட்: 16,874 வாக்குகள்) 4-ம் இடத்தில்தான் வேட்பாளரை நிலைநிறுத்தியது.

கோவை தெற்கு தொகுதியை ஒப்பிடுகையில் கவுண்டம்பாளையம் பெற்றுள்ள வாக்குகள் ஒப்பீட்டு அளவில் பரவாயில்லையே ஒழிய இது எங்கள் எதிர்பார்ப்புக்கும் குறைவான ஓட்டு. ஏன் இப்படி நடந்தது என்பதை கட்சி பரிசீலிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x