Published : 18 Jul 2022 07:10 AM
Last Updated : 18 Jul 2022 07:10 AM
மதுராந்தகம்: அதிமுக பொதுக்குழுவுக்கு சென்றுதிரும்பியபோது, சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
சென்னையில் கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, திருவண்ணாமலை மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்த 16 பேர்வேனில் பயணம் செய்தனர்.
அப்போது மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரி என்ற இடத்தில் வேன் மீது லாரி மோதி 16 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் அண்ணாமலை, பரசுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 14 பேர் மட்டும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த துரை, தங்கராஜ், ரவி, சரவணன், பெருமாள் ஆகிய 5 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் பொதுக்குழு முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய 4 அதிமுக நிர்வாகிகள், மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கம் என்ற இடத்துக்கு வந்தபோது, கார் மீது லாரி மோதியதில் காயம் அடைந்தனர்.
அதில் சதீஷ்குமார், சரவணன் இருவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேரில் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை பெறுவோரின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT