

சவுகார்பேட்டை டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வந்த பாபுசிங் (50) என்பவர் கடந்த 3-ம் தேதி மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக யானைக்கவுனி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 பேரின் புகைப்படங்களை வைத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பதுங்கியிருந்த ராகேஷ் ரித்தோர் (23), அவரது கூட்டாளி டிக்கம்பர்(21) ஆகியோரை கடந்த 23-ம் தேதி சென்னை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் களின் தலைவனாக ஹக்கிம் என்பவர் செயல்பட்டது தெரியவந் துள்ளது. கைது செய்யப்பட்ட இரு வரும் சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராகேஷ் ரித்தோர், டிக்கம்பர் இருவரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இருவரிடமும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த 5 நாட்களுக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
தலைமறைவாக இருக்கும் கூலிப்படை தலைவன் ஹக்கிமை பிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.