

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே மொன்னவேடு, ராஜபாளையம் கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆறு பாய்கிறது. இவ்விரு கிராமங்களை ஒட்டி எறையூர், மெய்யூர், கல்பட்டு, ஏனம்பாக்கம், ஆவாஜிபேட்டை, மாளந்தூர், செம்பேடு, மூலக்கரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இவர்கள் மருத்துவம், கல்வி, பணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருவள்ளூர் மற்றும் சென்னை பகுதிகளுக்கு கொசஸ்தலை ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த தரைப்பாலம், கடந்த 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது சேதமடைந்தது.
இதையடுத்து இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2020-ல்தொடங்கியது. ஆனால், அப்பணி மெத்தனமாக நடந்து வருவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தரைப்பாலம் சேதமடைந்ததால், தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது சுமார் 20 கி.மீ. சுற்றிச்செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர்,கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி இரவு தற்காலிக தரைப்பாலமும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, தற்போது மீண்டும் ஆற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்யும் மழை பெருமழையாக பெய்தால் அதுவும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த உயர்மட்டப் பாலம் கடந்த2020 ஜூன் 27-ம் தேதி ரூ.13.60 கோடிமதிப்பில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். 18 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்ட அப்பணி மெத்தனமாக நடந்து வருகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சா.மு.நாசர், “கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த பாலப் பணியில் 20 சதவீதம் கூட முடிவடையாமல் உள்ளது. எனவே பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 6 மாதங்களுக்குள் நிறைவு பெறும்” என்றார். ஆனால், அவர் சொன்ன 6 மாதங்கள் முடிந்து, மேலும் 3 மாதங்கள் கடந்தும் பாலம் அமைக்கும் பணியில் பாதிதான் முடிந்துள்ளது.
எனவே, இப்பணியை துரிதப்படுத்தி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நிறைவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோருகின்றனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கரோனா பரவல், மழை உள்ளிட்ட காரணங்களால் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
60 சதவீத பணிகள் நிறைவு
அப்பணியை தற்போது துரிதப்படுத்தியுள்ளோம். ஆகவே, 8 தூண்கள் அமைக்கும் பணிஉட்பட 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அத்தூண்களை இணைக்கும் பணி, பாலத்தின் இருபுறமும் மண்ணை தாங்கும் சுவர்கள், சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 40 சதவீத பணிகள் வரும் டிசம்பரில் முடிவுக்கும் வரும்” என்றார்.