

காவல்துறையையும், முதல்வரையும் குறை கூற எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என, கூடங்குளம் துப்பாக்கிச் சூடு, சாத்தான் குளம் காவல் நிலைய மரணம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி அமைச்சர் வேலு, கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதி மரணத்தைப் பொறுத்தவரை அச்செய்தி வெளிவந்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்து, வழக்கு விசாரணை நாளை (இன்று) நடைபெற உள்ளது.
இதற்கிடையே, பெற்றோரை தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும் என உறுதியும் அளித்துள்ளார். இதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்து, எந்த பதவியில் உள்ளோம் என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் பழனிசாமி, திமுக அரசின் மீது வசைபாடியுள்ளார்.
‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’
இதற்கிடையே அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை எங்கிருந்தோ தூண்டிவிடப்பட்டுள்ளது. இதை அறிந்ததும் முதல்வர் ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டு, காவல்துறை டிஜிபி, உள்துறை செயலரை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி, வன்முறை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டியுள்ளார்.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது, ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொன்று பலநாட்கள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசேதோல்வியடைந்து ஸ்தம்பித்து நின்றது.
‘டபுள் டிஜிபி’
சாத்தான் குளம் காவல் நிலையமரணத்தில், காவல் நிலைய கட்டுப்பாட்டையே வருவாய்த் துறையின் கீழ் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்ட சூழல் உருவாகியது. ‘டபுள் டிஜிபி’ போட்டுகாவல்துறையையே சீரழித்த பழனிசாமிக்கு, காவல் துறையையும் முதல்வரையும் குறை கூற எந்த தார்மீக தகுதியும் இல்லை.
கள்ளக்குறிச்சி மதி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீதிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்பதையும் சேர்த்தே காவல் துறை விசாரித்து வருகிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தூண்டி விட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப் படும். மாணவி மதி மரணத்தில் சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.