Last Updated : 09 May, 2016 03:22 PM

 

Published : 09 May 2016 03:22 PM
Last Updated : 09 May 2016 03:22 PM

தேர்தல் பிரச்சாரம் செய்ய கன்னியாகுமரியில் குவியும் தேசிய தலைவர்கள்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம்

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

தேர்தல் வரலாற்றில் கன்னியாகுமரி பகுதி தனித்துவமும், சிறப்பும் பெற்று திகழ்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலானாலும் சரி, மக்களவைத் தேர்தல் ஆனாலும் சரி. இங்கு வெற்றிவாகை சூடும் கட்சி ஆட்சியை பிடித்து வருவது இதுவரையிலான நடைமுறை. மேலும், இந்த மாவட்டத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. மாநில கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கைகோத்து தேர்தலை சந்தித்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.

தேசிய தலைவர்கள் பிரச்சாரம்

இதன் காரணமாக, தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் தேசிய தலைவர்கள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கு இணையாக குமரி மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் நேற்று பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஏற்கெனவே பாஜகவின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அருமனையில் பிரச்சாரம் செய்தார். பாஜக தலைவர் அமித் ஷா நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதேபோல் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரை குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அக்கட்சி பிரமுகர்கள் இறங்கியுள்ளனர்.

காங்கிரஸ் ஏற்பாடு

நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம் செய்த இதே கன்னியாகுமரி ஏழுசாட்டுபத்து மைதானத்தில்தான் கடந்த மக்களவைத் தேர்தலின் போது சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார்.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் கிள்ளியூர், விளவங் கோடு, குளச்சல் ஆகிய தொகுதி களில் காங்கிரஸ் போட்டியிடுவதால் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ராகுல் காந்தி நாளை (மே 10-ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து வரும் அவர் களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை இளைஞர்களை சந்தித்து வாக்குச் சேகரிக்க உள்ளார்.

பின்னர், நாகர்கோவிலில் நடைபெறவுள்ள பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற் கிறார். தேசிய தலைவர்களின் வருகையால் அந்தந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மாநில தலைவர்கள்

இதேபோல் மாநில கட்சிகளின் முக்கிய தலைவர்களும் குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை முடித்துள்ளனர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தேமுதிக சார்பில் விஜயகாந்த், பிரேமலதா, மதிமுக சார்பில் வைகோ, தமாகா சார்பில் வாசன், மார்க்சிஸ்ட் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், சமக சார்பில் சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x