Last Updated : 02 May, 2016 02:51 PM

 

Published : 02 May 2016 02:51 PM
Last Updated : 02 May 2016 02:51 PM

நம்பகத்தன்மையற்ற பணப்பட்டுவாடா புகார்களால் குமரியில் அலைக்கழிக்கப்படும் பறக்கும் படையினர்

குமரி மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. பெரும்பாலான புகார்கள் பணப்பட்டுவாடா தொடர் பாக வருகின்றன. ஆனால், பல இடங்களில் பணம் சிக்காததால் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் அலைக்கழிக்கப் படுகின்றனர். இதனால் முறையாக தேர்தல் பணியில் ஈடுபட முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 3 தினங்களாக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. நேற்று முன்தினம் திங்கள்நகர் அருகே காருபாறையில் உள்ள ஒரு வீட்டில் அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கட்டுப்பாட்டறைக்கு புகார் வந்தது. அங்கு சென்ற வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால், பணம் ஏதும் சிக்கவில்லை. அதே நாளில் குமரி மாவட்டத்தின் 3 இடங்களில் பணம் பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வந்தன. சோதனை நடத்திய அதிகாரிகள் பணம் ஏதும் சிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தொடரும் புகார்கள்

இதேபோல் நேற்று காலையில் இருந்து கட்டுப்பாட்டறைக்கு வந்த புகார்களில் அதிமுகவும், திமுகவினரும் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டி போட்டு பணம் பட்டுவாடா செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

இவற்றில் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பனச்சமூட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக புகார் வந்தது. ஆனால், அங்கு சோதனையிட சென்ற பறக்கும் படையினர் வெறும் கையுடன் திரும்பினர். நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட ஈசாந்தங்கில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் உதவியுடன் அதிமுகவினர் வீடு வீடாக பணம் கொடுப்பதாக புகார் வந்தது. அதுவும் தவறான தகவல் எனத் தெரியவந்தது.

நம்பகத்தன்மையற்ற தகவல்கள்

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 125 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் இருந்து 30 புகார்கள் வந்துள்ளன. கன்னியாகுமரியில் 27, குளச்சலில் 25, பத்மநாபபுரத்தில் 19, விளவங்கோடில் 16, கிள்ளியூரில் 8 புகார்கள் வந்துள்ளன.

முதலில் சுவர் விளம்பரம், அகற்றப்படாத கட்சிக் கொடிகள் குறித்த புகார்களே வந்தன. ஆனால், தற்போது வரும் புகார்கள் அனைத்தும் பணம் பட்டுவாடா தொடர்பானவையாகவே உள்ளன. சம்பந்தப்பட்ட இடத்தில் பறக்கும்படையினர் சோதனைகளை மேற்கொண்டால் யாரும் சிக்குவதில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இல்லை.

இது குறித்து புகார் தெரிவிப்பவரிடம் கேட்டால், சோதனை நடத்த பறக்கும்படையினர் வரும் தகவலை அறிந்து சம்பந்தப்பட்ட கட்சியினர் இடத்தை மாற்றிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர், பணப்பட்டுவாடா குறித்து தகவல் அறிந்ததால் கட்டுப்பாட்டறைக்கு புகார் தெரிவித்ததாகக் கூறுகின்றனர்.

இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற புகார்களால் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முறையாக பணிகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப் படுகின்றனர். உண்மையாகவே முறைகேடு நடக்கும் இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே தேர்தல் கட்டுப்பாட்டறைக்கு புகார் கூறுவோர், நம்பகத்தகுந்த தகவல்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x