

ஏழு மாதங்களுக்குப் பிறகு பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு இன்று ஆய்வு செய்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது, அணையின் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிக்கு மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவுக்கு உதவியாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை செயற்பொறியாளர் அம்பரீஷ் கரிஸ்கிரீஸ் தலைமையில் தமிழக பிரதிநிதிகளாகப் பெரியாறு அணையின் செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம் நியமிக்கப்பட்டனர். கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், உதவி செயற்பொறியாளர் பிரசீத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அணையை ஆய்வு செய்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதற்கிடையில் தமிழகப் பிரதிநிதி சவுந்தரம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணி மாறுதல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அணையை மத்திய துணைக்குழு இன்று ஆய்வு செய்ய உள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை உயர்அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மழை இல்லாததால் நீர்மட்டம் 111 அடிக்கு கீழே குறைந்து விட்டது. இம்மாத இறுதியில் கேரளத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதற்கு முன்னதாக அணையை மத்திய துணைக்குழு ஆய்வு செய்ய உள்ளது. பெரியாறு அணையின் கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் சாம்இர்வீன் உதவி செயற்பொறியாளர் சவுந்திரத்துக்குப் பதிலாக தமிழகப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.