Published : 12 May 2016 09:28 AM
Last Updated : 12 May 2016 09:28 AM

கருத்துக் கணிப்புகள் தவிடுபொடியாகும்: திருச்சி மாநாட்டில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் உறுதி

கருத்துக் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அந்த கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சி பஞ்சப்பூரில் நேற்று நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியபோது, “தமிழகத்தில் சில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் ஏமாற்று வேலை. தமிழகத்தில் இளைஞர்களின், ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதரவும் எங்களுக்குத்தான் கிடைக்கும். எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவோம். இதை திமுகவும், அதிமுகவும் சொல்கின்றன, ஆனால் இதை செய்யவே மாட்டார்கள். விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்றார்.

மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, “தமிழகத்தில் மாற்று ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். கூட்டணியிலுள்ள 6 கட்சிகளின் சார்பில் அமைச்சர்கள் பங்குகொள்ளும் வகையிலான கூட்டணி ஆட்சி அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, “திமுகவும், அதிமுகவும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி மக்களின் வாக்குகளை விலைபேச முயற்சிக்கின்றனர். இத்தேர்தலில் வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பதை தடுத்துவிட்டால், எங்கள் அணி 100 சதவீதம் வெற்றி பெற்றுவிடும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, “தவறான கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் நலக் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெறப்போகிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவோம், வந்தவுடன் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் ஊழல் மூலம் சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்வோம்” என்றார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியபோது, “தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது. இந்த முறை அதிமுக, திமுகவிடம் ஏமாற மக்கள் தயாராக இல்லை” என்றார்.

மாநாட்டில், நெல்லை கண்ணன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். தமாகா விவசாய அணி சார்பில் கூட்டணி தலைவர்களிடம் மண்வெட்டியும், விஜயகாந்திடம் ஏர்கலப்பையும் விவசாயிகளின் கோரிக்கைகளும் வழங்கப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x