

ஜெயலலிதாவின் பிரச்சாரத்துக்காக சாலைகள் அடைக்கப்பட்டதால் சென்னை முழுவதும் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். போயஸ் கார்டனில் இருந்து 3 மணிக்கு புறப்பட்ட ஜெயலலிதா, நேற்று ராதாகிருஷ்ணன் சாலை வழியாக நடேசன் சாலை சந்திப்புக்கு வந்து பேசினார். இதனால் அந்த இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டேம்ஸ் சாலை, காந்தி இர்வின் பாலம், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு, பேசின் பிரிட்ஜ், பேரக்ஸ் சாலை, ஓட்டேரி பாலம், எம்டிஎச் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம், கோயம்பேடு பேருந்து நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக முதல்வர் பிரச்சாரத்துக்கு சென்றார்.
அந்த சாலைகளில் முதல்வர் ஜெயலலிதா வருவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே போலீஸார் போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் சென்னையில் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் அருகே அதிக கூட்டம் கூடியதால், ரயில் நிலையத்துக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாடி மேம்பாலம் அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை நீண்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். பல இடங்களில் போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.