

புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நேற்று மாலை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி ரமேஷ் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
பதவி ஏற்றுக்கொண்டபின் கிரண்பேடி பேசியதாவது:
குடியரசுத் தலைவர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் இந்த ஞாயிற்றுக் கிழமையை ஏன் தேர்வு செய்தேன் என்பதை உங்களுக்கு விளக்க வேண்டும். இந்த நாள் என்னுடைய தாயார் கடந்த 1999-ம் ஆண்டு எங்களை விட்டு மறைந்த நாள்.
இந்த தினத்தை நானும் எனது சகோதரிகளும் தவறாமல் அனுசரித்து வருகிறோம். செய்யும் தொழில் தெய்வம் என எனது தாயார் கூறுவார். எனக்கு இந்த புதிய பொறுப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த அழகான பகுதியில் பணிபுரிய வந்துள்ளேன். வளமான புதுச்சேரியை உருவாக்க நாம் 3 கொள்கை மந்திரங்களை பின்பற்ற வேண்டும்.
முதலில் நம்பிக்கை. புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்க உள்ள நாராயணசாமியுடன் நம்பிக்கை யாக இணைந்து பணிபுரிய வேண் டும். நிதி, நிர்வாகம், நோக்கம் ஆகியவற்றில் நேர்மையும் நம்பிக்கையும் இருக்க வேண்டும். இரண்டாவது மந்திரம் மேம்பாடு. நமக்கு உள்ள வளங்களை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் தன்னிறைவு பெற வேண்டும்.
மூன்றாவது மந்திரம் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். இது மக்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் சுய பொறுப்பு அவசியம். இந்த மூன்று மந்திரங்களை நாம் பின்பற்றி புதுச்சேரியை வளமான புதுச்சேரியாக்க வேண்டும்.
ஒவ்வொரு துறையாக அதன் பலம், அதன் மேல் உள்ள சவால்கள், திறன் போன்றவற்றை முழுமையாக ஆய்வு செய்தேன். நாம் நேரடியாக களத்தில் இறங்கி புதுச்சேரியை நாட்டிலேயே ஒரு சிறந்த மாநிலமாக மாற்றவும், நமது நாட்டை கவுரவப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட கிரண் பேடிக்கு காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி, எம்பிக்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், தேர்ந்தெடுக் கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்கள், கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, நெட்டப் பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி, கிரண் பேடிக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, அவரது காலில் விழுந்து வணங்கினார். இதையடுத்து எம்எல்ஏ விஜயவேணியின் காலை தொட்டு பதில் வணக்கத்தை கிரண்பேடி தெரிவித்தார்.
தொடர்ந்து, எம்எல்ஏ விஜய வேணியின் கன்னத்தை வருடி, யாரும் எவர் காலிலும் விழக்கூடாது என தெரிவித்தார். பின்னர், அனை வருக்கும் தேநீர் விருந்து அளிக்கப் பட்டது.