

சென்னை: தமிழகம் முழுவதும் ‘தமிழ்நாடு நாள்’ விழா இன்று பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்கிறார்.
‘மெட்ராஸ் மாகாணம்’ என்ற பெயர் கடந்த 1967 ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவை தீர்மானம் மூலம் ‘தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது. இந்த தினம் ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.கலைவாணர் அரங்கில் கலை, பண்பாட்டு துறை சார்பில் பல்வேறுகலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, செம்மொழி பூங்கா, சென்ட்ரல்சதுக்கம் ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக கலை பண்பாட்டு துறை இயக்குநர் சே.ரா.காந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நையாண்டி மேளம், புரவியாட் டம், பம்பை கைச்சிலம்பாட்டம், காவடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறும். தமிழகத்தில் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூரில் அரசு இசைக் கல்லூரிகள் மூலமாகவும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கரூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபும், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடியில் அரசு இசைப் பள்ளிகள் மூலமாகவும் இயல், இசை, நாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.‘தமிழ்நாடு நாள்’ விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டிடம்.