

கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கதவணை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு கீழ்புறம் புதிய கதவணை அமைக்கப்படும். குடிதாங்கி கிராமத்தில் 1.2 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் வகையில் அமைக்கப்படும் இந்தக் கதவணை மூலம் 51 கிராம மக்கள் பயனடைவர்.
காவிரி டெல்டா பகுதிகளில் வெள்ள நீரைத் தேக்கி வைக்கவும், உப்பு நீர் உட்புகுவதைத் தடுக்கவும், மதகுகள் மற்றும் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் ரூ.1,560 கோடியிலான பணிகள் நிறைவேற்றப்படும்.
கடலோர மாவட்டங்களில் புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்கும் “கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நாகையில் மின்வழித் தடங்களை பூமிக்கு அடியில் நிறுவும் பணி 2018-க்குள் முடிக்கப்படும்.
தஞ்சை மாவட்டம் வடசேரியில் திமுகவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ரசாயன ஆலையில், 2009-ல் திமுக ஆட்சியின்போது மதுபான ஆலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலையால், வடசேரியைச் சுற்றியுள்ள 10 கிராமங்களின் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், ஆலைக்கு எதிராக மக்கள் போராடினர். 2010-ல் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டனர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 9-ம் தேதியை கருப்பு தினமாக கிராம மக்கள் அனுசரித்து வருகின்றனர்.
விவசாயிகளை அடித்துத் துன்புறுத்தும் திமுகவினர், விவசாயிகளின் எதிரிகள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார் ஜெயலலிதா .