Published : 17 Jul 2022 11:16 PM
Last Updated : 17 Jul 2022 11:16 PM

“உள்கட்சி மோதலை திசைதிருப்ப மாணவி மரணத்தை அரசியலாக்கும் இபிஎஸ்” - திமுக குற்றச்சாட்டு

சின்னசேலம்: “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி ஒரு மாணவியின் மரணத்தை கூட அரசியலாக்கி தன் உள்கட்சி மோதலை திசைதிருப்பப் பேட்டியளித்திருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவி மரணத்தைப் பொறுத்தவரை அச்செய்தி வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவரும், காவல்துறைக் கண்காணிப்பாளரும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்கூறி போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தது. மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்றுவந்த வேளையில் பெற்றோர் தரப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை நாளைய தினம் நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையில் பிள்ளையை இழந்த பெற்றோரின் குடும்பத்தைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்துவிட்டு எந்தப் பதவியில் நாம் இருக்கிறோம் என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் இன்றைய தினம் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கிருந்தோ தூண்டிவிடப்பட்டு வந்த சில விஷமிகள் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அறிந்தவுடன் மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் “மக்கள் அமைதி காக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டதுடன், டிஜிபியையும், உள்துறைச் செயலாளரையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வன்முறையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்து தற்போது அங்கே அமைதியை நிலை நாட்டியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது காவல்துறை நிர்வாகம் எப்படியிருந்தது என்றால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொன்று பல நாட்கள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசே தோல்வியடைந்து ஸ்தம்பித்து நின்றது. சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடி மரணத்தில் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டையே வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட சூழல் உருவாகி தன் கீழ் இருந்த காவல்நிலையத்தின் நிர்வாகத்தையே கோட்டை விட்டு கோட்டையில் அமர்ந்திருந்தார் பழனிசாமி.

அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு நிர்வாகத்தில் “டபுள் டிஜிபி” போட்டு காவல்துறையையே சீரழித்தவருக்கு இன்று திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நின்று சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரையும், முதல்வரையும் குறை சொல்ல எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி இந்த வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்பதையும் சேர்த்தே போலீஸ் விசாரித்து வருகிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தூண்டிவிட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்பதோடு மாணவி மரணத்தில் நடைபெறும் சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x