சேலம் | காவிரியில் வெள்ள அபாயம்: பூலாம்பட்டி - நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பூலாம்பட்டி - நெருஞ்சிப்பேட்டை இடையிலான விசைப்படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பூலாம்பட்டி - நெருஞ்சிப்பேட்டை இடையிலான விசைப்படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
Updated on
1 min read

சேலம்: பூலாம்பட்டி - நெருஞ்சிப்பேட்டை இடையே காவிரி ஆற்றில் இயங்கிவந்த விசைப்படகு போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள காவிரி கரையோர கிராமமான பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கு காவிரி ஆற்றில் நடந்து வந்த விசைப்படகு போக்குவரத்து, வெள்ளப்பெருக்கால் நிறுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி அருகே உள்ள காவிரி கரையோர கிராமமான பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் உள்ள கதவணை நீர்ப்பரப்பில், பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்ட எல்லையான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே விசைபடகு போக்குவரத்து நடந்து வருகிறது.

இரு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவியர், விவசாயிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசைப்படகு மூலம் வந்து செல்வது உண்டு. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 1,33,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

இதனால், பூலாம்பட்டி கதவணை பகுதியில் வெள்ளப்பெருக்கால், விசைப்படகு பயணிகளின் பாதுகாப்பினை கருதி நேற்று முன் தினம் (16ம் தேதி) முதல் விசைப்படகு போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதன் காரணமாக சேலம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மறுகரைக்கு செல்ல 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு, கோனேரிப்பட்டி கதவணை பாலம் வழியாக பயணித்து, ஆற்றினை கடந்து செல்லும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வெள்ள அபாயம் குறையும் வரை தொடர்ந்து விசைப்படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மறு உத்தரவு வரும் வரையில், விசை படகுகளையும், பரிசல் மற்றும் இதர பயன்பாட்டின் மூலம் ஆற்றினை பொதுமக்கள் கடக்க முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in