

சென்னை: " சின்னசேலத்தில் காவலர்கள், காவல்துறை வாகனங்கள், பள்ளிக்கூடத்தை தாக்குவது சூறையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற கலவரத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளிக்கூடத்தில், மாணவி இறந்தது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக என்ன நடந்தது என்பது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியிருக்கிறோம்.
இறந்துபோன மாணவியிடமிருந்து ஒரு கடிதத்தையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயத்தையும் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இதுபோன்ற கூட்டத்தைக் கூட்டி, ஒருசிலர் தனியார் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை தடுப்பதற்கு காவல்துறை எவ்வளவோ முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையின் உத்தரவை மீறி, போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் சென்றதால், தடியடி நடத்தி காவல்துறையினர் அவர்களை கலைத்துள்ளனர்.
காவல்துறையினரையும், அதிகாரிகளையும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். எனவே இந்த போராட்டக்காரர்கள் உடனடியாக வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். காவலர்கள், காவல்துறை வாகனங்கள், பள்ளிக்கூடத்தை தாக்குவது சூறையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற கலவரத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த பகுதியில் ஏற்கெனவே 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ள நிலையில், மேலும் 500 காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ் 2 மாணவி கடந்த புதன்கிழமை பள்ளிக் கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அது கலவரமாக மாறியது.