Published : 17 Jul 2022 09:10 AM
Last Updated : 17 Jul 2022 09:10 AM

சேலம் திறந்தவெளி சிறைக்குள் மாதம் 4 டன் காய்கறி விளைவிக்கும் கைதிகள்

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் நன்னடத்தை அடிப்படையில் போலீஸார் பாதுகாப்புடன் சிறை கைதிகள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் மாதம் 4 டன் காய்கறிகளை விளைவிக்கின்றனர்,’ என சேலம் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்செயலாக குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகளை கண்டறிந்து நன்னடத்தை அடிப்படையில், சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறைச் சாலையில் விவசாயப் பணிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

திறந்தவெளி சிறைச்சாலையில் 10 கைதிகள் விவசாய பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு காய்கறிகளை விளைவித்து வருகின்றனர். திறந்த வெளிச் சிறையில் கைதிகள் விவசாயப் பணியில் ஈடுபடுவது குறித்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நேற்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டு செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை 10.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கரடு முரடாக இருந்த திறந்தவெளி சிறைச்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது, மத்திய சிறைக்கு தேவையான காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவர்களுக்கு தினசரி கூலி வழங்கப்படுகிறது. மேலும், நன்னடத்தை விதியின் அடிப்படையில் இங்கு பணியில் ஈடுபடும் கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படும்.

இங்குள்ள கைதிகளைக் கொண்டு இயற்கையான முறையில் மண்புழு உரம் தயாரித்து, இடு உரங்களிட்டு, கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. மொத்தம் 10 கைதிகள் விவசாயப் பணியில் ஈடுபட்டு மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள 4 டன் காய்கறிகளை விளைவிக்கின்றனர். மாடுகள் மூலம் தினமும் சராசரியாக 15 லிட்டர் பால் பெறப்படுகிறது.

காய்கறி மற்றும் பால் மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறது. வரும் காலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டு வெளிச் சந்தையில் விற்பனை செய்யவும், காய்கறிகள் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், கூடுதலாக நன்னடத்தை கைதிகளை கண்டறிந்து, அவர்களையும் விவசாய பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, திறந்தவெளி சிறைச்சாலை உதவி ஆய்வாளர் திருமலை, முதல்நிலை தலைமை வார்டன் வெற்றி தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x