Published : 17 Jul 2022 09:00 AM
Last Updated : 17 Jul 2022 09:00 AM

வளர்ச்சி மூலம் மக்களை ஒருங்கிணைக்கும் பாமக: பொதுக் கூட்டத்தில் அன்புமணி கருத்து

பாமக 34-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் அன்புமணி மற்றும் நிர்வாகிகள். படம்: ம.பிரபு

வளர்ச்சி மூலம் மக்களை ஒருங்கிணைக்கும் கட்சி பாமக என்று, கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

பாமக 34-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:

வருங்காலத்தில் நமது அணுகுமுறை, செயல்பாடுகள், செயல்திட்டம் ஆகியவை வித்தியாசமாக இருக்கும். `பாமக 2.0' என்ற செயல் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம்.

ஏறத்தாழ 55 ஆண்டுகள் தமிழகத்தை இரு கட்சிகள் ஆண்டு வருகின்றன. தமிழகத்தை ஆளஅவர்களுக்கு மட்டும் தகுதி உள்ளதா? அதிக திறமையும், தகுதியும் உள்ள ஒரே கட்சி பாமக-தான். அனைத்து மாவட்டங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு பாமக-விடம் மட்டுமே உள்ளது.

நீட் தேர்வால் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு தேர்வுக்காக இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்?

பிள்ளைகளை தற்கொலைக்குத் தூண்டுவதில் பெற்றோரும் ஒரு காரணம். மேலும், கல்வி நமக்குத் தகுந்ததாக இல்லை என்பதே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்.

திமுக ஆட்சிக்கு வந்தபோது 80 தனியார் பள்ளிகள் இருந்தன. தற்போது ஆயிரக்கணக்கில் தனியார் பள்ளிகள் உள்ளன. இதுதான் திராவிட மாடல். கட்டணம் செலுத்தாமல், எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். அதுதான் பாட்டாளி மாடல். மருத்துவமனையில் லட்சக்கணக்கில் கொடுத்தால், அது திராவிட மாடல். எங்களால் கட்டணமில்லா மருத்துவத்தைக் கொடுக்க முடியும்.

அரசு நிகழ்ச்சியில் பூஜை கூடாது என்கிறார் தருமபுரி எம்.பி. தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்க மட்டும் ஏன் அனுமதிக்கிறீர்கள்? அவர்களது நம்பிக்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கிக்கொள்ளுங்கள்

தமிழகத்தில் மற்ற கட்சிகள் மக்களைப் பிரிக்கின்றன. ஆனால், வளர்ச்சியை முன்வைத்து மக்களை இணைக்கிறது பாமக. இதுதான் பாட்டாளி மாடல். மதுக்கடைகளை மூடுவதும், போதைப் பழக்கத்தை ஒழிப்பதும் தான் எங்களுக்கு முக்கியம். 2026-ல்பாமக ஆட்சி அமைய உறுதியேற்போம். இவ்வாறு அன்புமணி பேசினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, மாவட்டச்செயலாளர் ஜி.வி.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x