Last Updated : 10 May, 2016 05:57 PM

 

Published : 10 May 2016 05:57 PM
Last Updated : 10 May 2016 05:57 PM

பிரதமர் பேச்சைக் கேட்க 30% கூட்டம் அதிகம்: வாக்கு வங்கி சதவீதத்தை அதிகரிக்குமா?

கன்னியாகுமரியில் 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை விட நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்க திரண்ட கூட்டம் அதிகம். இதனால் உற்சாகமடைந்துள்ள பாஜகவினர், இது தேர்தலில் வாக்கு வங்கியை அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தென்மாவட்டங்களில் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே உள்ள ஏழுசாட்டுபத்தில் உள்ள மைதானத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அந்த கூட்டத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருந்ததாக உளவுத்துறை தெரிவித்திருந்தது.

இரு ஆண்டுகளுக்கு பின்பு நேற்று முன்தினம் அதே மைதானத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பிரதமர் மோடி பேசினார். பாஜக அரசின் இரு ஆண்டு சாதனைகளைக் கூறி வாக்குக்கேட்ட மோடி, காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளை நேரடியாக குற்றம்சாட்டுவதை தவிர்த்தார். தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து தமிழக ஆட்சி குறித்து மறைமுகமாக குற்றம்சாட்டினார். பிரதமரின் இந்த அணுகுமுறை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே நேரம் இளையதலைமுறை தொண்டர்கள் பலர் பிரச்சாரம் முடிந்து வெளியே வந்தபோது, `பிரதமர் அரை மணிநேரம் தான் பேசினார். இன்னும் கூடுதல் நேரம் பேசுவார் என எதிர்பார்த்தோம். தமிழக ஆட்சியாளர்களை நேரடியாக தாக்கிப் பேசுவார் என எதிர்பார்த்தோம். கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியின் பேச்சில் எதிர்க்கட்சிகளை காரசாரமாக தாக்கி பேசும் ஆவேசம் இருந்தது. தற்போது பிறர் மனம் நோகும்படி பேசாமல் பார்த்துக்கொள்கிறார்..’ என பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அதுமட்டுமின்றி இம்முறை பிரதமரின் பிரச்சார கூட்டத்தில் அதிகமான தொண்டர்கள் கூடியிருந்தனர். பிரச்சாரம் முடிந்து அனைவரும் வெளியேற கூட்ட நெரிசலால் 45 நிமிடத்துக்கு மேல் ஆனது. அதிகமான வாகனங்கள் வந்திருந்ததால் மாலையில் 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கன்னியாகுமரி முதல் கோட்டாறு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நாகர்கோவிலை அடைய இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆனது.

குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு மோடி இதே மைதானத்தில் பேசிய போது திரண்ட கூட்டத்தைவிட, தற்போதைய கூட்டத்துக்கு 35 சதவீதத்துக்கும் மேல் மக்கள் அதிகம் கூட்டம் காணப்பட்டது.

அதாவது 30 ஆயிரம் பேர் பங்கேற்றதாக உளவுத்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். இக்கூட்டம் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதற்கு சான்றா? சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவில் இதன் தாக்கம் எதிரொலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, `மோடி பொதுக்கூட்டத்துக்கு 3 மாவட்டங்களிலும் இருந்து தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. அவரவர் சொந்த செலவில் வாகனங்களை வாடகைக்கு பிடித்து வந்துள்ளனர். இந்த எழுச்சியான தொண்டர்கள் கூட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x