Published : 17 Jul 2022 06:07 AM
Last Updated : 17 Jul 2022 06:07 AM

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் - அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால் திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது. திமுக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடாமல் இருந்ததால், தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாகியுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் குழு அறிக்கை அளித்த பிறகும், தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.

ஏற்கெனவே கடந்த மே 2-ம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த அம்பத்தூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணகுமார் தற்கொலை செய்துகொண்டார். கோவை அரசு பொருட்காட்சியில் கடந்த 15-ம் தேதி பணியில் இருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காவலர் காளிமுத்து 16-ம் தேதி (நேற்று) உயிரிழந்தார். இவரும் ஆன்லைன் ரம்மி விளையாடி, பணத்தை இழந்து, கடன்வாங்கி விளையாடி, ஒரு கட்டத்தில் கடன் பிரச்சினையால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்ததாக செய்தி வந்துள்ளது.

எனவே, ஆன்லைன் சூதாட்டம் உட்பட அனைத்து நாசகார செயல்களையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கையை திமுக அரசு உடனே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி தனதுட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 2-வது உயிரிழப்பு நடந்துள்ளது. கடந்த 11 மாதங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுநர் குழு அறிக்கை அளித்து 20 நாட்களாகியும், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்காதது ஏன்? ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்துவிடும். லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும். இனியும், இதுபோன்ற அவலநிலை தொடராமல் இருக்க, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x