Published : 17 Jul 2022 06:11 AM
Last Updated : 17 Jul 2022 06:11 AM

செல்ஃபி எடுப்பதற்காக சென்றபோது விபரீதம் - காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்பு

செல்ஃபி எடுக்கும் ஆசையில் மேட்டூரில் காவிரி ஆற்றின் நடுவே சென்ற 3 இளைஞர்கள், நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளத்தின் நடுவே சிக்கினர். தீயணைப்பு படையினர் உடலில் கயிறு கட்டிக்கொண்டு, உயிரை பணயம் வைத்து போராடி, இளைஞர்களை பத்திரமாக மீட்டனர்.

சேலம்: மேட்டூரில், காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களை தீயணைப்பு படையினர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

மேட்டூர் அணை நிரம்பிவிட்ட நிலையில், அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் உபரியாக, காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு 1,13,000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணை நிரம்பியதை அறிந்து, அணையில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை காண்பதற்காக, மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் மேட்டூர் வருகின்றனர். குறிப்பாக, மேட்டூரில், சேலம் - மேட்டூர் சாலையில் உள்ள பாலத்தின் மீதிருந்து, 16 கண் மதகு வழியாக வெளியேறும் வெள்ளத்தை எளிதாக காண முடியும். தற்போது, இந்த பாலத்தின் மீது நின்று மக்கள் ஏராளமானோர் கண்டு ரசிப்பதுடன், அனைவரும் செல்போனில் போட்டோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது என ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.

இதற்கிடையே, மேட்டூர் அனல் மின் நிலையத்தை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைக் காண்பதற்காக, சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் 3 பேர், கரையில் இருந்து ஆற்றினுள் சற்று தூரத்தில் இருந்த பாறை மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்து, வெள்ளத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம், இதுநாள் வரை இருந்த இருகரைகளைக் கடந்து, தனது பரப்பை அதிகரிக்கத் தொடங்கியது. அதில், இளைஞர்கள் நின்றிருந்த பாறையை மூழ்கடிக்கும் வகையில் வெள்ளம் அதிகரித்தது. கரைக்கு எளிதில் செல்ல முடியாத வகையில், நீரின் வேகமும் அதிகரித்தது. இதனால், பாறை மீது நின்ற இளைஞர்கள், அங்கிருந்து வெளியேற வழியின்றி தவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சிறப்பு காவல் படையினர் ஆகியோர் இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கிய இடத்துக்கு வந்தனர். அங்கு தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு, நீண்ட கயிற்றின் ஒருமுனையில், தங்களை கயிற்றால் கட்டிக்கொண்டு, காற்றடைத்த மிதவை வளையத்துடன் ஆற்றினுள் இறங்கி, மிகுந்த போராட்டத்துக்கு பிறகு 3 இளைஞர்களையும் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்தமீட்புப் பணி, அனைவரிடமும் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியது. இளைஞர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புவீரர்களை மக்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x