

கோவை: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற மாநில அரசு செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை கெம்பட்டி காலனியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் சார்பில் ‘நமக்காக நம்ம எம்எல்ஏ’ என்ற நடமாடும் சேவை வாகனத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வாகனத்தை தொடங்கி வைத்த பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்த பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக வரும் 21-ம் தேதி ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். இவ்விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது குறித்து ஆதாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளோம். தமிழகத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம்.
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், யாரையோ காப்பாற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்துக்கு செல்வோம். மக்களுக்கு திமுக அரசு மீது சலிப்பு வந்துவிட்டது.
பாஜக, அதிமுக உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையை முடிவு செய்யும் அதிகாரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்தான் உண்டு. அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய நிதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஏகமனதாக இந்த வரி போடப்பட்டது. இப்பிரச்சினைக்கான தீர்வை பாஜக போராடி கொண்டு வரும்.
பெரியார் பல்கலைக் கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதுகலை வரலாறு கேள்வித்தாளில் 10 -வது கேள்வி பெரியாருக்கு யார் பட்டம் கொடுத்தது எனவும், 11- வது கேள்வி சாதி பற்றியும் உள்ளது. ஒரு கையில் பெரியாரையும், மறு கையில் சாதியையும் வைத்துக் கொண்டு திமுக 70 ஆண்டுகளாக அரசியல் செய்கிறது என்றார்.