

திருச்சி: திருச்சியில் ஒரே நேரத்தில் 2,140 மாணவ, மாணவிகளுக்கு ‘செஸ்' விளையாட்டு கற்பித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மாணவ மாணவிகளுக்கு செஸ் விளையாட்டை பயிற்றுவித்து மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, ஒரே நேரத்தில் மிக அதிகமான பங்கேற்பாளர்களுக்கு செஸ் விளையாட்டை கற்பிப்பதில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி திருச்சி கேம்பியன் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2,140 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரபல பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை கா.ஜெனித்தா ஆண்டோ செஸ் விளையாட்டு குறித்து விளக்கினார்.
மேலும் செஸ் விளையாட்டின் முக்கியத்துவம், விதிகள், விளையாடும்போது பயன்படுத்த வேண்டிய நுண்ணறிவு போன்றவை குறித்து சுமார் 30 நிமிடங்கள் விளக்கினார். இதன்மூலம் இந்நிகழ்வு ஒரே நேரத்தில் மிக அதிகமான பங்கேற்பாளர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்து பாடம் கற்பித்ததற்கான உலக சாதனை புரிந்தது.
இதையடுத்து கடந்த 31.12.2018-ல் உக்ரைன் நாட்டில் 1,496 பேர் கலந்து கொண்டு படைத்த சாதனை முறியடிக்கப்பட்டு, புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளதாக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் அறிவித்தனர். மேலும் இதற்கான உலக சாதனை சான்றிதழ்கள், பதக்கங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.