

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகம் முழுவதும் குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
திருச்சி பஞ்சப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றி மாநாட்டில் அவர் பேசியது:
திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, பொன்முடி, ஆற்காடு வீராசாமி போன்ற பலரும், அதிமுகவில் அமைச்சர்களாக உள்ள ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் அந்தந்த பகுதிகளில் குறுநில மன்னர்கள் போன்று செயல்பட்டனர். இவர்களின் குடும்பத்தினரும் அதிகாரம் செலுத்தி வந்தனர்.
மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால், சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.
அதிமுக, திமுக ஆகியவை ஊழல் கட்சிகள். இவை அமைத்திருப்பதும் ஊழல் கூட்டணி. நாங்கள்தான் மக்கள் நலனைக் காக்கும் கூட்டணி.
மீத்தேன் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலினும், ஷேல் காஸ் திட்டத்துக்கு ஜெயலலிதாவும் ஒப்பந்தம் போட்டு, தமிழக விவசாயிகளை அழிக்கின்றனர். இவர்களுக்கா உங்கள் ஓட்டு.
எங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் உள்ள குடிசைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, கல் வீடுகள் கட்டித் தரப்படும். குடிநீர் பற்றாக்குறையை போக்குவோம். மூடப்பட்ட அரசுப் பள்ளிகளைத் திறப்போம். மதுவிலக்கை அமல்படுத்துவோம். விவசாய விளைப் பொருட்களுக்கு நியாயமான விலை கொடுப்போம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என்றார் விஜயகாந்த்.