

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் 60.47 சதவீதம் என்ற குறைந்த அளவே வாக்கு பதிவானது. தொகுதிவாரியாக கணக் கிட்டால் சென்னை துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 55.77 சதவீதம் பதிவாகியுள்ளது.
அரசியல் கட்சிகளின் அத்தனை பிரச்சாரங்களையும் மிஞ்சும் விதமாக தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரசாரங்கள் இந்த தேர்தலில் தூக்கலாகவே இருந்தன. அதற்கேற்ற கடுமை யான உழைப்பை ஆணையமும் அதன் ஊழியர் படைகளும் அர்ப்பணித்திருந்தன.
சிறியது முதல் பெரியது வரையிலான அத்தனை தனியார் நிறுவனங்களும், கடைகளும் தங்களது ஊழியர்கள் வாக்கு களை செலுத்த வசதியாக விடுப்பு அளித்திருந்தன. கட்டிடங்களில் கல் சுமக்கும் கூலித் தொழிலாளர் கள்கூட கடமையாற்ற ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை சாலைகளும் தெருக் களும் வெறிச்சோடிக் கிடந்தன.
அத்தனை காட்சிகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு கிடைத்த பெருவெற்றியாகவே உணரப்பட்டன. ஆனாலும், தலைநகர் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்து போயிருப்பது வேதனைக்குரிய விஷயமாகவே படுகிறது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியபோதும் பொறுப்புணர்ந்து கணிசமான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். ஆனால் சென்னயைப் பொருத்தவரை மழை இல்லாமல் மேகமூட்டமாக ரம்மி யான சூழலே நிலவியது. அப்போ தும் கூட பலர் வாக்குச்சாவடிக்கு வராதது சமூக ஆர்வலர்களை வேதனை கொள்ளச்செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் நிமிடத்துக்கு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டு உரக்க அரசியல் பேசும் கூட்டம் வழக்கம்போல விடுமுறையை அனுபவிக்கச் சென்று விட்டதாகவே தெரிகிறது.
வாட்ஸ்-அப்பில் விதவிதமாய் குரூப்களை கடைபரப்பி வகைதொகையில்லாமல் வாதம் கிளப்பும் கூட்டம் வாக்களிக்க வரவில்லை போல் தெரிகிறது.
தமிழகத்தின் பிற ஊர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய தலைநகர் தனது ஜனநாயகக் கடமையில் அலட்சியம் காட்டியிருப்பது பெரும் தலைக்குனிவே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சமூக வலைத்தளங்களில் அரசியல் பேசும் கூட்டம் வழக்கம்போல விடுமுறையை அனுபவிக்கச் சென்று விட்டதாகவே தெரிகிறது