

சுகாதாரத்துறையில் அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி உள்ளிட்ட 78 அறிவிப்புகள் செயல் பாட்டில் உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என கருணாநிதியும், திமுகவினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கெனவே 6 துறைகளில் வெளியிட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 3 துறைகளின் மீதான அறிவிப்புகள் தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள் ளன.
ஏழை மக்கள் பல்வேறு நோய்களுக்கு தரமான உயரிய சிகிச்சையை கட்டணமின்றி பெறுவதற்காக பல துறை உயர்சிறப்பு மருத்துவமனை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதே வளாகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டு, கடந்த கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம்’ ஏற்படுத்தப்பட்டு, 14,707 பணி யாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். அரசு மருத்துவமனை களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ‘அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்’ வழங்கப்பட்டு வருகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை’ மற்றும் ‘அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை’ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தாய்மையடைந்த பெண்களுக்கு 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட, ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ என்ற முழுமை பெற்ற மருத்துவ பொக்கிஷம் ரூ.10 கோடி செலவில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் வளர்ச்சித்துறை
டெல்லியில் உள்ள தமிழ்ச் சங்கத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியுடன் தோரண வாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் வைப்புத் தொகையுடன் தொல்காப்பியர் ஆய்விருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக் குறளை கொரிய மொழியில் வெளியிட ரூ.36 லட்சம் ஒதுக் கப்பட்டுள்ளது.
சீனம், அரபு மொழிகளில் ஆத்திச்சூடி மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.பாவேந் தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ்க் கவிஞர்கள் நாள் என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெற அவர்களது பெற்றோருக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.25 கோடி செலவில் 576 விடுதிகளில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.