

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அதிமுக சார்பில் 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், அதிமுக உறுப்பினர்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட், திமுக உறுப்பினர்கள் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு, காங்கிரஸ் உறுப் பினர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதி முடிகிறது.
இவர்கள் உட்பட நாடு முழு வதும் 57 மாநிலங்களவை உறுப்பினர் களின் பதவிக்காலம் முடிகிறது. இதை யடுத்து, இந்த 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு புதியவர் களை தேர்வு செய்வதற்கான தேர் தலை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை உறுப் பினர்களின் பதவிக்காலம் முடிவதை அடுத்து காலி இடங்களை நிரப்ப, தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி, தேர்தல் அறிவிக்கை மே 24-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. மே 31-ம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 1-ம் தேதி பரிசீலனை நடக்கும். ஜூன் 3-ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
போட்டி இருந்தால் ஜூன் 11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். அன்று மாலை 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். மாநிலங்களவை தேர்தல் நடவடிக்கைகள் ஜூன் 13-ம் தேதியுடன் முடியும்.
இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், துணை செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமித்துள்ளது. வேட்பு மனுக்களை பிற ஆவணங் களுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ 24- ம் தேதி முதல் 31-ம் தேதி வரை காலை 11 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். பொது விடு முறையான 29-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தவிர பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு தேவைப்பட்டால் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் நடக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையத்தின் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செயல்படுகிறார்.
தேர்வு எப்படி?
மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் மூலமே தேர்வுசெய்யப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் எம்எல்ஏக்களாக சில தினங்களில் பதவியேற்பர். இவர்கள் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமையை பெறுகின்றனர். இதில், வெற்றி பெறும் கட்சியின் அடிப்படையில் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் மாறும்.