

அரியலூர்: அரியலூரில் நாளை நீட் தேர்வு எழுத இருந்த மாணவி இன்று (ஜூலை 16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் நகரம் ரயில்வே காலனி தெருவை சேர்ந்தவர்கள் நடராஜன்-உமாராணி. நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். உமாராணி பிள்ளைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள். மகள் நிஷாந்தி (16) 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்2 முடித்துள்ளார். பிளஸ்2 பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றார். இவர், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக கோச்சிங் சென்டருக்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நாளை நீட் தேர்வு எழுத உள்ள நிலையில், நிஷாந்தி நேற்று இரவு தனது வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் நிஷாந்தி வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் அறையை திறந்து பார்த்த போது, அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீஸார், விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பிவைத்தனர். மேலும், மாணவி எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
மாணவி நிஷாந்தி கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார். தற்போது 2-வது முறையாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக மாணவி மன உலைச்சலில் இருந்ததாகவும், நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மாணவியின் இறப்பு குறித்து அரியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிஷாந்தியின் தம்பி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.