Published : 16 Jul 2022 07:48 AM
Last Updated : 16 Jul 2022 07:48 AM

2-வது முறையாக 1 லட்சம் கனஅடியை கடந்தது நீர்வரத்து; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை: மேட்டூர் அணை இன்று நிரம்ப வாய்ப்பு

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பகுதியில் தண்ணீர் ததும்பி நிற்கிறது.

தருமபுரி/சேலம்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நடப்பாண்டில் 2-வது முறையாக நீர்வரத்து நேற்று மீண்டும் விநாடிக்கு 1 லட்சம் கனஅடியைக் கடந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து இன்றுமுழுக் கொள்ளளவை எட்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவிலுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று மதியம் விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. நடப்பு ஆண்டில் 2-வது முறையாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியைக் கடந்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளை அரசுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை நிரம்புகிறது

இதனிடையே காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர்அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 115.73 அடியாக உயர்ந்தது.

அணைக்கான நீர்வரத்து நேற்று இரவு விநாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்தது.

டெல்டா பாசனத்துக்காக நேற்று மாலை விநாடிக்கு 25,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர்அணை இன்று (16-ம் தேதி) முழுக்கொள்ளளவை (120 அடி) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் உபரி நீர்ப்போக்கியான 16 கண் மதகுகள் எந்நேரத்திலும் திறக்கப்படும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே மேட்டூர் அணைமுழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் அணையில் இருந்து எந்நேரமும் உபரிநீர்அதிகளவில் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, காவிரி கரையையொட்டி, தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள், தங்களின் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று மேட்டூர் அணை நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணை நிரம்பியது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கும்பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைகளில் இருந்து பாயும் சின்னாறு மற்றும் தேனாறு ஆகியவற்றிலும் நீர்வரத்து அதிகரித்துஉள்ளது.

அமராவதி அணைக்கு விநாடிக்கு 10,000 கனஅடி வரை நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் அதன்முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து, அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, விநாடிக்கு 5,425 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x