Published : 16 Jul 2022 07:30 AM
Last Updated : 16 Jul 2022 07:30 AM
சென்னை: தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலில்சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. கல்லூரிப் பிரிவில் மாநிலக் கல்லூரி 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
‘என்.ஐ.ஆர்.எப்-2022' (தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு)தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார். அதில் ஒட்டுமொத்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள 100 கல்வி நிறுவனங்களில், தொடர்ந்து 4-வது முறையாக சென்னை ஐஐடி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகமும், 3-வது இடத்தை மும்பை ஐஐடியும் பிடித்துள்ளன.
இந்த தரவரிசையில் தமிழகத்தில் இருந்து அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் (16), வேலூர் விஐடி (18), திருச்சி என்ஐடி (21), அண்ணா பல்கலைக்கழகம்(22), கோவை பாரதியார் பல்கலைக்கழகம் (24) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன. கடந்தாண்டு 47-ல் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது 70-வது இடத்துக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்83-ல் இருந்து 88-க்கும் சரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்தகோவை அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் 5-வது இடமும், விஐடி 9-வது இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 15-வது இடமும், எஸ்ஆர்எம் 19-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகம் 20-வது இடமும் பெற்றுள்ளன.
மாநில கல்லூரி 3-ம் இடம்
கல்லூரிகளின் தரவரிசையில் டெல்லி மிராண்டா ஹவுஸ் நிறுவனம் முதல் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடம், லயோலா கல்லூரி 4-வது இடம் உட்பட 32 கல்லூரிகள் பிடித்துள்ளன.
ஆராய்ச்சி நிறுவன தரவரிசையில் தமிழகத்தின் சென்னை ஐஐடி 2-வது இடமும், விஐடி 10-வது இடமும், அண்ணா பல்கலைக்கழகம் 21-வது இடமும் பெற்றுள்ளது. அதேபோல், பொறியியல் பட்டியலில் முதல் இடத்தை சென்னை ஐஐடி இந்தாண்டும் தக்க வைத்துள்ளது. இதில் திருச்சி என்ஐடி(8), வேலூர் விஐடி (12), அண்ணா பல்கலைக்கழகம் (17), கோவை அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் (19) உட்பட 35 கல்வி மையங்கள் உள்ளன.
இதேபோல், மேலாண்மை பிரிவில் சென்னை ஐஐடி 10-வது இடத்திலும், கட்டிடப் பிரிவில் திருச்சி என்ஐடி 5-வது இடத்திலும், எஸ்ஆர்எம் 11-வது இடத்திலும் உள்ளன. சட்டப்பிரிவில் சவீதா மருத்துவம் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (14), தஞ்சாவூர் சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக் கல்வி (19) ஆகிய 2 தமிழக கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
மருத்துவப் பிரிவில் வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி 3-வது இடமும், அம்ரிதா விஸ்வா வித்யாபீடம் 8-வது இடமும், சென்னை மருத்துவக் கல்லூரி 12-ம் இடமும், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 15-ம் இடமும், எஸ்ஆர்எம் 20-ம் இடமும் பெற்றிருக்கிறது. இதில் சென்னை மருத்துவக் கல்லூரி கடந்தாண்டைவிட 4 இடங்கள் முன்னேறியுள்ளது.
பல் மருத்துவம் பிரிவில் சவீதா மருத்துவம், தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் முதல் இடமும், எஸ்ஆர்எம் பல் மருத்துவ கல்லூரி 8-வது இடமும், பார்மசி பிரிவில் ஊட்டி ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரி 6-வது இடத்திலும், எஸ்ஆர்எம் 12-வது இடத்திலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் 15-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலை முன்னேற்றம்;
தேசிய தரவரிசையில் 2018-ம் ஆண்டு 10-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் பின்னர் சரிவை சந்தித்து 25-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தாண்டு தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறியுள்ளது. இதேபோல் ஆராய்ச்சி பிரிவிலும் 32-ல் இருந்து 21-வது இடத்துக்கும், பொறியியல் தரவரிசையில் 18-ல் இருந்து 17-வது இடத்துக்கும் வந்துள்ளது.
அதேநேரம் பல்கலைக்கழக பிரிவில் 2018-ல் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் தற்போது 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு, ‘‘இந்தியாவிலேயே 3-வது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இச்சாதனைக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT