

உடுமலை: உடுமலையை அடுத்த குடிமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த மேமாதம் முதல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றாலைகள் மூலம் இரவு, பகலாக மின் உற்பத்திநடைபெற்று வருகிறது.
முத்துக்கவுண்டன்புதூர், மசக்கவுண்டன்புதூரில் தனியார் ஸ்பின்னிங் ஆலைக்கு சொந்தமான காற்றாலை, பலத்த காற்றால் சேதமடைந்தது. அதன் இறக்கைகள் உடைந்து, காற்றில் பறந்து சென்றன.
ஒரு கிமீ தொலைவில் உள்ளவிவசாய நிலத்திலும், குடியிருப்புகளுக்கு அருகிலும் அவை விழுந்தன. அதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் நீரா.நா.பெரியசாமி, ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் ‘காற்றாலைகளின் ஆயுள் காலத்தை கடந்தும் சில பகுதிகளில் அவை இயக்கப்படுகின்றன. இதன்காரணமாகவே காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் அவை உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்து,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கோ, அவர்களின் விளை பொருட்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ காற்றாலைகளால் ஆபத்து நேராமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான காற்றாலைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.