Published : 16 Jul 2022 06:12 AM
Last Updated : 16 Jul 2022 06:12 AM
கடலூர்: 'தமிழ் மண் வளம்' இணைய தளம் உருவாக்குவதற்காக குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வயல் அளவில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
பயிர்களுக்கு முறையற்ற உரப்பயன்பாடு, அடர் சாகுபடி மற்றும் அங்கக உரங்கள் பயன்படுத் தாமை, உயர் விளைச்சல் ரகங்கள் சாகுபடி ஆகியவை காரணமாக மண்ணிலுள்ள சத்துக்களின் அளவு குறைந்தும், களர், உவர் மற்றும் அமில நில பிரச்சினை அதிகரித்தும் காணப்படுகிறது.
இக்காரணிகளை கண்காணித்து மாற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக, வேளாண் உழவர் நலத்துறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்து 'தமிழ் மண் வளம்' என்ற தனி இணையதளம் உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக நேரடியாக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு சென்று முன்னரே சேகரிக்கப்பட்ட தரவுகளை, வயல் மட்ட அளவில், புல எண் வாரியாக சரிபார்க்கும் பணி குறிஞ்சிப்பாடி வட்டாரம் கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது.
கடலூர் வேளாண் இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சென்னை வேளாண் இயக்குநர அலுவலக வேளாண் உதவி இயக்குநர் அருள் நங்கை, குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் ஆகியோர் மண்வள இணைய முகப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இவ்வாறு சரிபார்த்த விவரங்கள் தமிழ்நாடுவேளாண்மை பல்கலை கழகத்திற்கு அனுப்பப்பட்டு 'தமிழ் மண் வளம்' இணைய தளம் உருவாக்கும் பணி செம்மைப்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT