Published : 16 Jul 2022 06:15 AM
Last Updated : 16 Jul 2022 06:15 AM

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்கும் வடமாநிலங்கள்: பணித்திறன் கொண்ட இளையோரை உருவாக்க சிஐஐ திட்டம்

இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் (சிஐஐ) புதுச்சேரி பிரிவுத் தலைவர் சுரேந்தர், துணைத் தலைவர் ஜோசப் ரொசாரியோ ஆகியோர் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

புதுச்சேரி: இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் (சிஐஐ) புதுச்சேரி பிரிவுத் தலைவர் சுரேந்தர், துணைத் தலைவர் ஜோசப் ரொசாரியோ ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள பெரும் பாலான தொழில்களின் இன்றைய தேவைகள் வட இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலத்தவர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் முதலீடுகளை நாடத்தொடங்கி, வெளிமாநிலங்களில் பணியில் உள்ள தொழிலாளர்களை திரும்ப அழைக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் தொழில்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு நாம், பணித்திறன் கொண்ட இளைஞர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்தே உருவாக்க வேண்டும். புதுச்சேரி சிஐஐ அதற்கான திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஜூலை இறுதியில் இரு நிகழ்வுகளை நடத்தவுள்ளோம்.

அதேபோல், புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளை படிக்கும் உள்ளூர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவு என்று கூறுவது தவறானது. உண்மையில், புதுச்சேரியில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எங்களால் விரும்பிய மனிதவளத்தைப் பெறமுடியவில்லை என்பதுதான் உண்மை.

அதற்காக, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் வகையில் படிப்பு களை உருவாக்க வேண்டும்.

சிஐஐ ஏற்கெனவே பொறியியல், ஐடிஐக்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுடன் இணைந்து பணிபுரியத் தொடங்கியுள்ளது.

இது மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த உதவும். வணிக நிறுவனங்களின் செயல்பாட்டில் உள்ள பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்ள, ஆசிரியர்களுடன் மாணவர்கள்தொழில்துறை வருகைகளை மேற்கொள்ள அனுமதிக் கப்படுகிறார்கள். ஆனால் அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ ஆகியவற்றுக்கு இடையே பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதற்கும் அதிக ஒத்துழைப்பு தேவை.

புதிதாக தொழில் தொடங்க புதுச்சேரி வருபவர்களுக்கு நிலம் தேவைப்படுகிறது.

புதுச்சேரி அரசு, கரசூரில் நிலத்தை கையகப்படுத்தி வைத்திருக்கிறது. அதில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் வருவதற்கு கொடுக்கப்பட உள்ளன. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அதனால் வேலைவாய்ப்பு வரும்.

மின்சக்தியில் இயங்கும் பேட்டரி வாகனங்கள் தயாரிப்பதற்கு ஏற்ற கொள்கையை புதுச்சேரி அரசிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம். உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் மின்சார விநியோகத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, தொழில்துறை நடவடிக்கைகளில் சிறந்த ஒருங்கிணைப்புக்கு ஒரு நிபுணரை அரசு நியமிக்க வேண்டும்.

குறிப்பாக, அரசு துறைகள் மட்டுமின்றி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் இருந்தும் சில சட்டபூர்வ அனுமதிகளை தொழிற்சாலைகள் பெற வேண்டி இருக்கிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் கால விரயம் ஏற்படுகிறது. எனவே கொம்யூன் பஞ்சாயத்துகளிடம் இருந்து தொழிற்சாலைகள் உரிமம் உள்ளிட்ட அனுமதிகளை பெறுவதற்கு விலக்களிக்க அரசிடம் கோரியுள்ளோம். ஐடி போன்ற சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் எளிமையாக பணியாற்றும் வகையில் வேலை நேரங்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.

இதற்கு புதுவை அரசு சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x