

ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து வார்டுபாயாக பணிக்கு சேர்ந்தவர் தன் விடாமுயற்சியாலும் ஊக்கத்தாலும் மருத்துவத் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டு கண் விழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்துள்ளார். இறந்த வர்களின் கண்களை பாதுகாப் பாக அகற்றி சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக் கிறார்.
வந்தவாசி மாவட்டம் வாச்சலூர் கிராமத்தில் பாளையம்மாள் சின்னதம்பியின் 5-வது மகனாகப் பிறந்த வேலு தன் 5 வயதில் தந்தையை இழந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பிறகு வேலைதேடி சென்னைக்கு வந்தார். உறவினர் உதவியால் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 1983-ம் ஆண்டு வார்டுபாயாக சேர்ந்தார்.
அங்கு 3 ஆண்டுகள் பணிபுரிந் தார். அப்போதே சிறுநீரகத் துறையில் பரிசோதனைக்கூட உதவியாளராகவும் பணியாற் றினார். பின்னர் பி.ஆர்.எஸ். மருத்துவமனையில் 5 ஆண்டுகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் உதவியாளராக இருந்தார். கூடவே, தன் அனுபவம் மூலம் மருத்துவம் சார்ந்த பல நுணுக்கங்களையும் கற்றார்.
சென்னையில் ராஜன் கண் மருத்துவமனையில் 1995-ம் ஆண்டு சேர்ந்தார். மருத்துவர்கள் மோகன் ராஜன், சுஜாதா மோகன் தந்த ஊக்கத்தால் கண் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப படிப்பை படித்தார். படிப்பறிவு மற்றும் தனது அனுபவத்தின் அடிப்படையில், இறந்தவர்களின் கண்களை அகற்றும் பணியில் 2000-ம் ஆண்டில் முதன்முறையாக ஈடுபட்டார். கடந்த 14 ஆண்டுகளில், இறப்புக்குப் பிறகு சுமார் 1300 பேரின் கண்களை அகற்றி 2600 பேருக்கு பார்வை கிடைக்க வழி செய்துள்ளார். இது மட்டுமின்றி, கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையும் செய்து வருகிறார்.
சகோதரரின் கண்களையும்…
வேலுவின் சகோதரர் கடந்த ஆண்டு இறந்தபோது, தனது சகோதரரின் கண்களை வேலு தன் கைகளாலேயே அகற்றி மற்றொருவருக்குப் பார்வை கிடைக்கச் செய்துள்ளார் வேலு.
9-ம் வகுப்பு மட்டுமே படித்த வேலு இன்று பயிற்சி கண் மருத்துவர்கள் பலருக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியராக உள்ளார். இவரது சாதனையைப் பாராட்டி ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் உயரிய விருதான தொழிற்பயிற்சி விருதை வேலுவுக்கு வழங்கி கவுரவித்துள்ளனர். வேலு பெற்ற முதல் விருது இது.
‘‘குடும்ப சூழல் காரணமாக, எதிர்பாராதவிதமாகவே இந்த துறையில் சேர்ந்தேன். ஆனாலும் இதில் உள்ள விஷயங்களை ஆர்வத்துடன் கற்றேன். பின்பு ராஜன் மருத்துவமனை மருத்துவர் கள் தந்த ஊக்கத்தால் கண் சம்பந்தப்பட்ட சிகிச்சை முறை களைப் படிப்படியாகக் கற்றுக் கொண்டேன். மருத்துவம் குறித்த அடிப்படை விஷயம்கூட தெரியா மல் வந்த என்னை மருத்துவர்களின் அன்பும் ஊக்கமும்தான் இந்த இடத்துக்கு கொண்டுவந்துள்ளது’’ என்கிறார் வேலு.
வேலுவின் அர்ப்பணிப்பு உணர்வு
‘‘வேலு எங்கள் மருத்துவ மனைக்கு கிடைத்த சொத்து. நேரம் காலம் இல்லாமல் உழைப்பவர். எங்களின் ஊக்கம் தவிர்த்து வேலுவின் சொந்த அர்ப்பணிப்பு உணர்வும்தான் அவரை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துள் ளது’’ என்று ராஜன் மருத்துவமனை மருத்துவர் மோகன் ராஜன் கூறினார். அர்ப்பணிப்பு உணர்வும், கடின உழைப்பும் என்றும் வீண்போகாது என்பதற்கு வேலு போன்றவர்களின் வாழ்க்கை முன்னுதாரணம்.