Published : 06 May 2016 07:42 AM
Last Updated : 06 May 2016 07:42 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - இப்ப பிரியாணி போடற மாதிரி அப்ப உப்புமா: யு.கே.வெள்ளியங்கிரியின் நினைவலைகள்

1989-ல் கோவை தொண்டாமுத்தூர் எம்எல்ஏ. 1958-ல் இருந்தே தொழிற் சங்க பொறுப்புகள். தொடர்ந்து 30 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர். தனது 38 வயதில் 1977-ம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூ. வெங்கிடு எம்எல்ஏ ஆக தேர்தல் பணியாற்றியவர். தற்போது கவுண்டம்பாளையம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியில் போட்டியிடும் வெங்கிடுவின் மகன் வி.ராமமூர்த்திக்கு தனது 77 வயதையும் மறந்து களப்பணி யாற்றும் யு.கே.வெள்ளியங்கிரி, அந்தக்கால தேர்தல் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘1952 பஞ்சாயத்து தேர்தலின்போது நான் 15 வயது சின்னப்பையன். அப்பவே வெங்கிடுவை சின்னவேடம்பட்டி பஞ்சாயத்து தலைவராக்க கட்சி வேலை செஞ்சேன். அவரும் நானும் ஒரே ஊரு. அப்ப வெங்கிடு ஒரு நிலச்சுவான்தாரை எதிர்த்து ஜெயித்தார். அப்பல்லாம் பெட்டி வச்சு தேர்தல் இல்லை. பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாக்காளர்களை எல்லாம் ஒரு இடத்துல கூட்டுவாங்க. அதுல போட்டியிடற தலைவருக பெயரை சொல்லி அவருக்கு ஓட்டுப் போடறவங்க எல்லாம் கைதூக்குங்கம்பாங்க. யாருக்கு அதிகம் பேர் கைதூக்கறாங்களோ, அவர தலைவரா அறிவிப்பாங்க.

அதேபோல காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சிகளுக்கு மஞ்சள், சிவப்புன்னு கட்சிக்கு ஒரு கலர்ல பெட்டிய மறைவுல வச்சுடுவாங்க. யார் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடணுமோ, அதற்கான வண்ணப் பெட்டியில ஓட்டுப் போடணும். 1960-ம் ஆண்டுக்கு பின்புதான் கட்சிகளுக்கு சின்னம் எல்லாம் வந்தது. இன்னின்ன ஏரியாவுக்கு இன்னின்னவர்கள் என்று கட்சியில பிரிச்சு விட்டுடுவாங்க. அவங்க அந்தந்த ஏரியாவில் வீடு வீடாக கொடிய பிடிச்சுட்டு அவங்கவங்க கட்சிக்கு ஓட்டு கேட்பாங்க.

ஆரம்ப காலத்துல கதிர் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தை காவி கலக்கியே சுவருல வரைவோம். காங்கிரஸ்காரங்க குருவி நீலம் வாங்கி எழுதுவாங்க. அவங்க வசதி அப்படி. 10 காசுக்கு நீலம் வாங்கினா ஒரு சுவர்லதான் எழுத முடியும். அதே செலவுல காவியால பத்து சுவருக்கு வரைய முடியும்.

அந்தக் காலத்துல காங்கிரஸ்காரங்க ஊர் பெரிய மனுஷங்க, நிலச்சுவாந்தாருக, மிராசுதாரருக மூலமா தேர்தல் நாளில் எளிய சனங்களுக்கு பண்ணையில உப்புமா போடுவாங்க. இப்ப பிரியாணி போடற மாதிரியான பெரிய விஷயம் அது. ஓட்டுக்கு காசுங்கிறது 1970-களிலேயே வந்துடுச்சு. வேண்டியவங்களை பார்த்து ரூ.2 கொடுத்து நம்ம கட்சிக்கு ஓட்டுப் போட்டுடுன்னு கொடுக்கிற வழக்கத்தை பார்த்திருக்கேன்’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x