

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்களில் எண்ணப்படும். இதற்காக இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இம் மையங்களில் செய்யப்பட வேண்டிய கூடுதல் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பி.சந்தரமோகன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அசுதோஷ் சுக்லா, மத்திய தேர்தல் பார்வையாளர் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பி.சந்தரமோகன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, “சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படுகின்றன. அதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோருக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்யவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணுமிடங்கள் ஆகியவை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்” எனக் கூறினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லா கூறும்போது, “வாக்கு எண்ணும் அனைத்து மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். இதற்கு தேவையான காவல் துறை அலுவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், வாக்குப் பெட்டிகளை வைக்கும் அறை மற்றும் வாக்கு எண்ணும் அறை, கட்டிடம், அதன் சுற்றுப்பகுதி ஆகியவற்றுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.