Published : 16 Jul 2022 06:44 AM
Last Updated : 16 Jul 2022 06:44 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல்களை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, ஆயுதப்படை பிரிவு, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர்,டிவிஎஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே செயல்படவில்லை. இதனால், இந்தப் பகுதிகளில் தினசரி காலை மற்றும்மாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆனால், இதை தவிர்க்கபோக்குவரத்து சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு எவ்வித முயற்சியையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியதாவது:
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து வரும்போது சாலைகளின் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து போலீஸார் கூட அங்கு இருப்பதில்லை.
போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால், அவற்றில் வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன.
இதேபோல, அறந்தாங்கியில் அண்ணா சிலை, கட்டுமாவடி முக்கம், எம்ஜிஆர் சிலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களும் சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன.
ஆலங்குடியில் வடகாடு முக்கத்தில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டு, ஓராண்டாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியபோது, “சிக்னல்களை பராமரிக்கும் தனியார் நிறுவனத்திடம் அறிவுறுத்தி உடனடியாக பழுது நீக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT