Published : 16 Jul 2022 06:36 AM
Last Updated : 16 Jul 2022 06:36 AM

கூட்டணி கட்சிகளை சிதைத்து ஆட்சியை நிலைநாட்டி வரும் பாஜக: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

அரியலூரில் காந்தி சிலையை நேற்று திறந்து வைத்து மரியாதை செலுத்தும் தி.க தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர்.

அரியலூர்: பாஜக தனது கூட்டணி கட்சிகளை சிதைத்து, தங்களது ஆட்சியை நிலைநாட்டி வருவதாக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.க. தலைவர் வீரமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காந்தி சிலையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: மக்களவையில் பேசக் கூடாத வார்த்தைகள் என்பதில் ஊழல் என்ற வார்த்தையும் உள்ளது. ரபேல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனக் கூறும்போது ஊழல் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. சர்வாதிகாரிகள் அனைவரும் அப்படித்தான் செய்வார்கள்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ஆகிய 3 பேரையுமே பொம்மைகள் போல பாஜக கையாண்டு வருகிறது. இந்தியா முழுவதிலும் பாஜக, தனது கூட்டணி கட்சிகளை சிதைத்து, தங்களது ஆட்சியை நிறுவி வருகிறது என்றார்.

முன்னதாக வீரமணி அளித்த பேட்டி: பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி ரீதியான கேள்விக்கு, யார் காரணமாக இருந்தாலும் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி நீக்கிக்கொள்வதால், அக்கட்சி இருக்கிறதா எனத் தெரியவில்லை.

அதிமுக என்றால் அடமானம் வைத்த திமுக என்று அர்த்தம். இவர்களுக்குள் உள்ள பிரச்சினையை பிறகு வைத்து கொண்டு, டெல்லியில் பாஜகவிடம் அடமானம் வைத்ததை திரும்ப மீட்க வேண்டும். இல்லை எனில் மூழ்கிவிடும். இது தமிழகத்தில் பாஜகவின் திருவிளையாடலாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x