Published : 03 May 2016 02:51 PM
Last Updated : 03 May 2016 02:51 PM

ஜெயலலிதா மந்திரம், கருணாநிதி தந்திரம், விஜயகாந்த் யதார்த்தம்: பிரேமலதா பேச்சு

ஜெயலலிதா என்றால் மந்திரம், கருணாநிதி என்றால் தந்திரம், விஜயகாந்த் என்றால் யதார்த்தம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரேமலதா பேசினார்.

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேன் மூலம் பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் கொல்லப்பட்டியில் அவர் பேசியதாவது:

தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதியும் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஜெயலலிதாவும் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. இந்த 2 கட்சிகளுமே டாஸ்மாக் கடைகளை அகற்றாது. ஏனென்றால், மதுபான ஆலைகளை இவர்கள்தான் நடத்துகின்றனர்.

ஆனால், தேமுதிக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு, தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். படித்த, படிக்காதவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, வறுமைகோட்டுக்கு கீழே உள்ள ஏழை பெண்களுக்கு இலவச திருமணம், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

வாக்களிக்கும் முன்னர் நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டனர்.

ஒவ்வொரு நாள் பிரச்சாரத்திலும் ஜெயலலிதா பொய்யான தகவல்களை வெளியிடுகிறார். கோவையில் பேசிய அவர், தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக பொய் சொல்லியிருக்கிறார். தொழில் வளர்ச்சியில் தமிழகம் 21-வது இடத்தில் உள்ளது.

ஜெயலலிதா தினமும் பொய்களை சொல்லி, மக்களிடம் மாயை உருவாக்கி ஏமாற்றப் பார்க்கிறார். ஜெயலலிதா என்றால் மந்திரம், கருணாநிதி என்றால் தந்திரம், விஜயகாந்த் என்றால் யதார்த்தம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

விஜயகாந்த் அணி எங்கிருக் கிறது என்றே தெரியவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். மக்கள் நலக் கூட்டணி தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கப்போகும் மே 19-ம் தேதியன்று, கருணாநிதிக்கு வெளிச்சமாக விஜயகாந்த் தெரிவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x