மத்திய அமைச்சர் முருகனை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்ததை அரசியலாக்க கூடாது: ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

புதுச்சேரி: கல்வியை மேம்படுத்ததான் ஆளுநர்கள் முயற்சி செய்கிறார்கள். மத்திய அமைச்சர் முருகனை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாகதான் இருக்கும். அதை அரசியலாக எடுக்கக்கூடாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்த பின்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''ஆளுநராக இருப்பதால் ஆளுநர், பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான விசயம் அதிகம் விவாதத்துக்கு உள்ளாகிறது. தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஆளுநர்கள் எல்லாரும் வேந்தர்களாக, அந்தந்த மாநில கல்வி நிலையங்களை மேம்படுத்த பணியாற்றுகிறார்கள். அரசும் ஆளுநரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வேந்தர்களாக இருப்பதற்கே ஆளுநருக்கு உரிமையில்லை என்ற வழிவகை செய்யக்கூடாது. கல்வியை மேம்படுத்ததான் ஆளுநர்கள் முயற்சி செய்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

இன்னொரு மாநில ஆளுநராக இருந்தாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கருத்து கூறுகிறேன். அவரை அழைத்தது, பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து அமைச்சராகியுள்ளது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக்கொள்ளாமல், மத்திய மாநில அரசை சார்ந்தோர் ஆளுநருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டு விழாக்களாகக் கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் இதைக்கூற உரிமை இருக்கிறது." என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் புதுச்சேரியைச் சேர்ந்தோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு தரும் கோப்பு நிலுவையில் உள்ளதே-கட்டணம் அதிகமாக்கியுள்ளார்களே என்று கேட்டதற்கு, "காரைக்கால் என்ஐடியில் 25 சதவீதம் புதுச்சேரி மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன். புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகத்திலும் அனைத்து படிப்புகளிலும் 25 சத இடஒதுக்கீடு தொடர்பாக தொடர்பாகவும், கட்டண உயர்வு தொடர்பாகவும் துணைவேந்தரிடம் விசாரிக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தைப் போல் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவத்தில் இடஒதுக்கீடு புதுச்சேரியில் தரும் கோப்பு நிலுவையில் உள்ளதே என்று கேட்டதற்கு, "அதை பற்றி விசாரிக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in