'தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?' - பெரியார் பல்கலைக்கழக கேள்வியால் சர்ச்சை

'தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?' - பெரியார் பல்கலைக்கழக கேள்வியால் சர்ச்சை
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் எம்ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 4 விடைகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையிலான கேள்வியாக இது கேட்கப்பட்டுள்ளது.

இதில் மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் ஆகிய நான்கு சாதிகள் குறிப்பிடப்பட்டு, இவற்றில் எது தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "அந்த கேள்வித்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது அல்ல. பிற பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. அந்தக் கேள்வித்தாள் கசிந்து விடக்கூடும் என்பதால் அதனை படித்து பார்க்கும் வழக்கம் பல்கலைக் கழகத்தில் இல்லை. இது குறித்து எந்த புகாரும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்'' என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வினாத்தாளை வடிவமைத்தது யார்? என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கு துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in