Published : 15 Jul 2022 05:09 AM
Last Updated : 15 Jul 2022 05:09 AM
சென்னை: அதிமுகவில் இருந்து இபிஎஸ் உள்ளிட்ட 22 நிர்வாகிகளை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 11-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு கட்சியில் இருந்து நீக்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலைஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை,அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் நீக்கி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இபிஎஸ் உள்ளிட்ட 22 பேரைகட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் க.பழனிசாமி (இபிஎஸ்), துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, எஸ்.டி.கே.ஜக்கையன், ஆர்.பி.உதயகுமார், ஆதி ராஜாராம், தி.நகர் பி.சத்யா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், சி.வி.சண்முகம்,ஆர்.இளங்கோவன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பாஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் நேற்று பேசும்போது, ‘‘கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடத்தில்தான் ஓ.பி.ரவீந்திரநாத் மூலம் வெற்றி கிடைத்தது. அவரை கட்சியில் இருந்து நீக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. இபிஎஸ் அறிவிக்கும் எந்த அறிவிப்பும் கட்சி சட்ட விதிப்படி செல்லாது. இபிஎஸ் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் குறித்து தினமும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்து வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT