Published : 15 Jul 2022 07:25 AM
Last Updated : 15 Jul 2022 07:25 AM
சென்னை: அதிமுகவில் பழனிசாமி அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் நியமனத்தை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவில் கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கட்சியின் 15 நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாகவும், எஸ்.பி.வேலுமணிதலைமை நிலையச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமனத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மீண்டும் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 14-ம் தேதி முதல்அதிமுக நிர்வாகிகள் சிலர், திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டு, அதிமுகவை உடைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சி விதிகளை மீறி ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு நடத்தப்பட்டதாக ஏற்கெனவே ஆணையத்தில் மனு அளித்திருக்கிறேன். அதன்பிறகு, விதிகளை மீறி ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எந்தவித அதிகாரமும் இன்றி கட்சித் தலைமை நிர்வாகிகள் இந்தசெயலில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்படாத, சட்ட விரோதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, வலுவான கட்சி விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
நான் இன்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறேன். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்றுவரை அமலில் உள்ளன. அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்த பதவிகளுக்கான காலம் 5 ஆண்டுகள் வரை உள்ளது.
இந்த சூழலில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவ்வாறு செய்ய கட்சிவிதியில் அனுமதி இல்லை.
இதற்கிடையே, கடந்த 13-ம் தேதிஇரவு, எந்த ஒரு பொறுப்பாளரின் அனுமதியும் இன்றி, கட்சியின் பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை இபிஎஸ் அறிவித்துள்ளார். அதில் அவர் தன்னை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ் தரப்பில் வழங்கப்பட்ட, விதிகளை மீறி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது.இபிஎஸ் அறிவித்துள்ள விதிகளை மீறிய நிர்வாகிகள் நியமனத்தையும் ஏற்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதற்கு கட்சி விதியில் அனுமதி இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT