

மதுரை: அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, பேச்சுரிமையின் சிறப்பு தணிக்கை அமைப்பாக நீதிமன்றங்கள் செயல்பட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொங்கு வேளாளர் சமூகம் சார்பில் பொன்னர் சங்கர் நாடகம் நடத்தப்படுகிறது.
இந்த நாடகத்தில் வரும் பல உரை யாடல்கள் வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆசாரி, ஆதிதிராவிடர், பிற் படுத்தப்பட்டோர் சமூகத்தின் மதிப்பை குறைக்கும் வகையிலும் உரையாடல்கள் உள்ளன.
இதனால் கரூர் மாவட்டத்தில் பொன்னர் சங்கர் நாடகம் தொடர்ந்து நடத்தப்பட்டால் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் பொன்னர் சங்கர் நாடகம் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து உரிமை, பேச்சு உரிமையில் நீதிமன்றம் சிறப்பு தணிக்கை அமைப்பாக செயல்பட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.