

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீஸார், மறுவிசாரணையை நடத்தி வருகின்றனர். முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை போலீஸார் விசாரித்துள்ளனர்.
கார் ஓட்டுநருக்கு சம்மன்
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தொழிலதிபர்கள், அவர்களது உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதனடிப்படையில், ஓட்டுநர் குணசேகரன், கோவை போலீஸ் பயிற்சிக்கல்லூரி வளாகத்தில் உள்ளவிசாரணைப் பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சிலநாட்களில் சாலை விபத்தில்உயிரிழந்தார். ஓட்டுநர் கனகராஜ் குறித்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் கனகராஜூடன் எவ்வாறு அறிமுகம் ஏற்பட்டது, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர் ஏதாவது தெரிவித்தாரா, கோடநாடு கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது தெரியுமா? என்பனபோன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.