Published : 03 May 2016 09:46 AM
Last Updated : 03 May 2016 09:46 AM

உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்வு செய்தது ஏன்? - விஜயகாந்த் விளக்கம்

ஆறுமுகங்களை கொண்ட இந்த கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளராக விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் இருந்து விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: உளுந்தூர்பேட்டையை நான் ஏன் தேர்வு செய்தேன் தெரியுமா? இங்கு குக்கிராமங்கள் அதிகம். மற்ற ஊர்களிலும் குக்கிராமங்கள் இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள உளுந்தூர்பேட்டையில் அதிக கிராமங்கள் இன்னும் முன்னேறாமல் உள்ளன. இதற்கு முன்பு நான் வெற்றிபெற்ற தொகுதிகளில் மேற்கொண்டுள்ள நலத் திட்டங்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

உளுந்தூர்பேட்டையில் ஒரு கல்லூரியும், மருத்துவமனையும் அமைக்க வேண்டும் என்பது எனது ஆசை. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள உளுந்தூர்பேட்டையில் சிறப்பு மருத்துவமனை அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

விவசாயமும், நெசவும் எனது இரு கண்கள் போன்றவை. அவைகளுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன். கபடி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து போன்றவைகளையும் தமிழரின் வீர விளையாட்டுகளையும் ஊக்குவித்து சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்யம் நடப்பதால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அதிமுக, திமுக இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக்கொள்கின்றனரே தவிர, மக்களுக்கு நாங்கள் இதை செய்தோம் என்று கூறவில்லை. இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு தேவையா? இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

புதுக்கோட்டை

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கோட்டையில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது ‘தமிழக தேர்தல் களத்தில் 3-வது அணி இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதற்கு, வயது முதிர்வால் அவருக்கு ஏற்பட்டுள்ள கோளாறு என்று கருத்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x