

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் தவறி விழுந்த 4 வயது மகளை மீட்க முயன்றபோது 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதூர் செங்கம் அருகே உள்ள உண்ணாமலைபாளையத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வசந்த் (22). இவரது மனைவி ராஜேஸ்வரி (22). மகள் சிவன்யா (4). கிருஷ்ணகிரி அருகேயுள்ள கே.பூசாரிப்பட்டி கன்னியப்பன் நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வசந்த் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜேஸ்வரி, மகளுடன் பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிக்கு துணிகளை துவைக்கச் சென்றார். சிறுமி ஏரிக்கரையில் விளையாடியபடி இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி குழந்தையை காப்பாற்ற ஏரியில் குதித்தார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கினர். அலறல் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து மீட்பதற்குள் இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மகாராஜகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.