Published : 16 May 2016 10:05 AM
Last Updated : 16 May 2016 10:05 AM

புதுச்சேரியில் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: 9 வரை 13% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் வாக்களிக்க காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர். காலையில் தூறலாக இருந்த மழை, 9 மணியளவில்அதிக அளவில் பொழிந்தது. அப்படியிருந்தும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி வரை 13 சத வாக்குகள் பதிவானது.

புதுச்சேரியில் யூனியனில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., மக்கள் நல கூட்டணி என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுதவிர நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர். புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

புதுச்சேரி மாநிலத்தில் 941935 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 447444. பெண் வாக்காளர்கள் 494412. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 79. ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

930 வாக்குச்சாவடிகள்

4 பிராந்தியங்களிலும் பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்காக 930 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெண்களுக்கு மட்டும் தனியாக 17 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 2 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்காக ஆண், பெண் வாக்காளர்கள் 6.30 மணிக்கே வந்து வரிசையில் நின்றனர். வெயில் கொளுத்தும் என்ற அச்சத்தில் காலையில் வந்து விட்டதாக வாக்காளர்கள் தெரிவித்தனர். ஆனால் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் குளிர்ச்சியாக இருந்தது. மேலும் நகரின் சில பகுதிகளில் தூறல் மழை பெய்தது.

தலைமை தேர்தல் அதிகாரி

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு பெருமாள் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான டாக்டர் பி.ஜவஹர் ஆகியோரும் தங்கள் மனைவியருடன் மதர் தெரசா சுகாதார பட்டமேற்படிப்பு மைய வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

முதல்வர் ரங்கசாமி கதிர்காமம் தொகுதியில் திலாசுப்பேட்டை அரசுத் தொடக்கப் பள்ளியிலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வாக்குச்சாவடியிலும், வாக்களித்தனர்.

5400 தேர்தல் அலுவலர்கள்

தேர்தல் பணிகளில் மொத்தம் 5400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்கை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ 1176 மாணவ தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்காளர்கள் தேர்தல் துறை அளித்த பூத் சிலிப் அல்லது தேர்தல் துறை அறிவித்துள்ள 10 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

6000 போலீஸார் பாதுகாப்பு

தேர்தல் பாதுகாப்புக்கென 30 கம்பெனி துணை ராணுவப்படையின் புதுவைக்கு வந்துள்ளனர். இப்படையினர் அனைத்து வாக்குச் சாடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 236 பகுதிகளில் பதற்றம் நிறைந்த 148 பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவப்படையினர், போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது மொத்தம் 86 சதவீதம் வாக்குக்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பெருமாள் கோயில் தெரு வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் கந்தவேலு கூறியதாவது:

முதல்தலைமுறை, இளம்வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உற்சாகமாக வந்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் காலை 9 முதல் அதிகளவில் மழை புதுச்சேரியில் பெய்யத்தொடங்கியது. மழையிலும் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 13 சதவீத வாக்குகள் பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x