Published : 15 Jul 2022 06:42 AM
Last Updated : 15 Jul 2022 06:42 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தொடுகாடு ஊராட்சி பகுதியில் 200 இருளர் இன மக்கள் உட்பட 217 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் அருகே தொடுகாடு ஊராட்சி பகுதியில், வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இருளர் இன மக்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், பங்கேற்று, 200 இருளர் இன மக்கள் உட்பட 217 பயனாளிகளுக்கு தலா ரூ.66,240 வீதம் ரூ.1.44 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்கள் எல்லாம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆவடி நரிக்குறவர் இன பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் மக்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர்வழங்கியுள்ளார்.
இப்பகுதியில்உள்ள வீட்டு மனைகளுக்கு கட்டிடம்கட்டித்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.இந்நிகழ்வில்,மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், திருவள்ளூர் சார்ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆடிக் கிருத்திகை, தெப்பம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 21-ம் தேதி முதல், 25-ம் தேதிவரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை, பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு அமைச்சர் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், திருத்தணி நகராட்சி துணைத் தலைவர் சாமிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT